அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூரில் புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த ஸ்டீபன் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், சுசிகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தொடக்க உரையாற்றினார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மரியதாஸ் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு கல்வித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ஆளவந்தார் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஆகிய மாநில முதல்-மந்திரிகள் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். அதேபோல் தமிழக முதல்-அமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.4.2003-க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் விஜய் நன்றி கூறினார்.