அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்
திருவாரூர் மாவட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு
தமிழக அரசு ஆணை எண்.354-ஐ உடனடியாக மறு ஆய்வு செய்ய வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். டாக்டர்களுக்கான சேம நலநிதியை விரைந்து வழங்க வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலநேரம் மாற்றி அமைத்துள்ள அரசாணை எண்.225-ஐ ரத்து செய்ய வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
கோரிக்கை அட்டை
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
வருகிற 24-ந் தேதி(சனிக்கிழமை) வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபடுவதுடன், 25-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.