அரசு சித்த மருத்துவர் மயங்கி விழுந்து சாவு
அரசு சித்த மருத்துவர் மயங்கி விழுந்து இறந்தார்.
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சம்பத், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர். இவரது மகன் அகிலன் (வயது 34). கடந்த 3 ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் அணியாமூர் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். தி.மு.க. மாவட்ட மருத்துவர் அணியில் துணை அமைப்பாளராக இருந்து வந்துள்ள அகிலன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மனம் வருந்திய அவர், தொடர்ந்து மதுஅருந்தி வந்துள்ளார். இந்தநிலையில் டாக்டர் அகிலன் நேற்று மதியம் வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் அகிலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.