ஏழாயிரம்பண்ணை பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்

ஏழாயிரம்பண்ணை பஸ் நிலையத்தை அரசு பஸ்கள் புறக்கணித்து செல்வதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-03-13 20:20 GMT

தாயில்பட்டி, 

ஏழாயிரம்பண்ணை பஸ் நிலையத்தை அரசு பஸ்கள் புறக்கணித்து செல்வதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

பஸ் நிலையம்

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணையில் சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் பஸ் நிலையம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. இங்கு பயணிகள் அமர்வதற்கான இருக்கை மற்றும் கழிப்பறை வசதி, உயர் மின் கோபுர விளக்கு, தண்ணீர் வசதி, பஸ் கால அட்டவணை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன.

பஸ் நிலையத்தில் பஸ்கள் எளிதாக வந்து திரும்பும் வகையில் விசாலமான முறையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது சாத்தூரிலிருந்து ஏழாயிரம் பண்ணை வழியாக சங்கரன்கோவில் செல்லும் அரசு பஸ்கள் மாரியம்மன் கோவில் முன்பாக பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

பயணிகள் ஏமாற்றம்

இதனால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. இதுபோன்று சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக ஏழாயிரம்பண்ணை வரும் அரசு பஸ், பஸ் நிலையம் வராமல் முந்தைய பஸ் நிறுத்தமான பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறது.

இது பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்காததால் சங்கரபாண்டியாபுரம், குகன்பாறை, துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, சத்திரம், சேர்வைக்காரன்பட்டி, மண்குண்டம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் பஸ் வராமல் ஏமாற்றம் அடைகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏழாயிரம் பண்ணை பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி, செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்