அரசு பஸ்-லாரி மோதல்; போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ்-லாரி மோதியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணத்திற்கு செல்வதற்காக அரசு பஸ் ஒன்று தயார் நிலையில் இருந்தது. இந்த பஸ்சை உடையார்பாளையம் அருகே வேளாண்நல்லூரை சேர்ந்த பாலமுருகன் (வயது 43) என்பவர் ஓட்டினார். அப்போது அந்த வழியாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த குப்பன்குழியை சேர்ந்த சிவக்குமார் (46) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். பஸ் நிலையத்தின் வளைவில் அரசு பஸ் திரும்பிய போது அங்குவந்த லாரியின் பக்கவாட்டில் அரசு பஸ் மோதியது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து, முன்பக்கம் முழுவதும் சிதைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரியலூர் போலீசார் லாரி டிரைவர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.