மழைநீர் ஒழுகிய அரசு பஸ் உடனடியாக மாற்றம்

அருமநல்லூர்-நாகர்கோவில் வழித்தட அரசு பஸ்சில் மழைநீர் ஒழுகியதை தொடர்ந்து அந்த பஸ் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சூப்பிரண்டு உள்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-04 21:39 GMT

நாகர்கோவில்:

அருமநல்லூர்-நாகர்கோவில் வழித்தட அரசு பஸ்சில் மழைநீர் ஒழுகியதை தொடர்ந்து அந்த பஸ் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சூப்பிரண்டு உள்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி செய்தி எதிரொலி

குமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆனாலும் பயணிகளின் வசதிக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் குறைபாடு உள்ள பஸ்கள் கண்காணிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அருமநல்லூரில் இருந்து நாகர்கோவில் (தடம் எண்: 4-சி) நோக்கி நேற்றுமுன்தினம் அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக பஸ்சினுள் மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் பஸ்சுக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனர். இதுதொடர்பான படம் தினத்தந்தி நாளிதழில் நேற்று வெளியானது.

2 பேர் மீது நடவடிக்கை

இதனைதொடர்ந்து அந்த பஸ்சுக்குள் மழை நீர் ஒழுகியதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், போக்குவரத்து கழகம் சார்பில் உடனே நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக நாகர்கோவில் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மழைநீர் ஒழுகிய பஸ்சை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து உடனே சீரமைக்கும் பணிக்கு அனுப்பப்பட்டது. மேலும் அந்த வழித்தடத்தில் மாற்று பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு காரணமான சூப்பிரண்டு உள்பட 2 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் விளக்க கடிதமும் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்