அரசு பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
திருச்செந்தூர் அருகே அரசு பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். நண்பர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே அரசு பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். நண்பர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
தனியார் நிறுவன ஊழியர்
தூத்துக்குடி பூபால்ராயபுரத்தை சேர்ந்த வன்னியராஜா மகன் ராஜகோபால் (வயது 26). அதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் முத்துக்குமார் (22). இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் நேற்று மாலையில் மணப்பாடு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது வழி தெரியாமல் திருச்செந்தூர்-நெல்லை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அரசு பஸ்மோதியது
திருச்செந்தூர் காந்திபுரம் அருகில் செல்லும் போது ராஜகோபால் தலையில் வைத்திருந்த தொப்பி காற்றில் பறந்து விழுந்தது. உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளனர். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது. இதில் ராஜகோபால் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முத்துக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து முத்துக்குமார் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இறந்த ராஜகோபால் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.