மானூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்க விழா- சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

மானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழா நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்;

Update: 2022-07-07 21:48 GMT

மானூர்:

மானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.

அரசு கல்லூரி

நெல்லை மாவட்டம் மானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று தற்போது தமிழக அரசு நடப்பு கல்வி ஆண்டில் மானூர் உள்பட 20 இடங்களில் கல்லூரியை அமைத்து உள்ளது.

இந்த கல்லூரிகளை சென்னையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

சபாநாயகர் அப்பாவு

இதற்காக மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞான திரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மாநகராட்சி துணை மேயர் ராஜூ, மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன், மானூர் தாசில்தார் சுப்பு, பி.டி.ஓ.க்கள் முத்துகிருஷ்ணன், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மானூர் அரசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வனஜா நன்றி கூறினார்.

நிரந்தர கட்டிடம்

இந்த கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். இங்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இயற்பியல் ஆகிய ஐந்து பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி கிராமத்தில் நெல்லை - சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுவரை தற்காலிகமாக மாணவர்களுக்கு மேலப்பிள்ளையார்குளம், அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்