வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புவோரை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று திருப்பூரில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புவோரை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று திருப்பூரில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
திருப்பூர்,
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புவோரை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று திருப்பூரில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
போலீஸ் டி.ஜி.பி.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மாலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். திருப்பூர் தொழில்துறையினர், வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டீமா, டெக்பா உள்ளிட்ட தொழில் அமைப்பினர், வடமாநில தொழிலாளர்கள், பனியன் நிறுவன மேலாளர்கள் பங்கேற்றனர். கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் ஏற்பட்ட பதற்றம் தற்போது தணிந்துள்ளது. கடந்த 8 நாட்களாக தமிழகத்தில் 37 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 9 போலீஸ் கமிஷனர்கள் ராணுவ கட்டமைப்போடு, ஒரு அணியாக நின்று இரவு பகலாக பணியாற்றி வதந்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். வதந்தி பரவிய முதல் 2 நாட்களில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோக்களை நீக்குமாறு நாம் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் பதிவை நீக்கவில்லை.
அதன் பிறகு தமிழகத்தில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். சில குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அனைவரும் தவறான வீடியோ காட்சிகளை அப்புறப்படுத்தி விட்டனர். இருப்பினும் தமிழகத்தை சேர்ந்த தனிப்படையினர் டெல்லி, பாட்னா, போபால் போன்ற இடங்களில் முகாமிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 46 ஆயிரம் வடமாநிலத்தவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். 467 நிறுவனங்களில் போலீசார் நேரடியாக தொழிலாளர்களை சந்தித்துள்ளனர். வதந்தி வீடியோ பரப்பிய விவகாரத்தில் திருப்பூரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.
எதற்காக வதந்தி பரப்பினார்கள்?
வதந்தி வீடியோ பரப்பிய குற்றவாளிகள், ஏதேனும் பணம் வாங்கிக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பதை பார்ப்பதற்காக, அவர்களின் வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். வதந்தி பரப்புவோரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வதந்தி வீடியோ பரப்பிய விவகாரத்தில் பீகார் உள்ளிட்ட மாநில போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தமிழகத்தில் அதிகாரிகள் குழு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளிமாநில தனி அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. வதந்தி பரப்பியவர்களை கைது செய்து விசாரணை முடிந்த பிறகு தான், எதற்காக வதந்தி பரப்பினார்கள் என்ற முழுமையான விவரம் தெரியவரும்.
வதந்தி பரப்ப கூடாது
வதந்தி பரப்பிய நபர்கள் பெரும்பாலானவர்கள் தலைமறைவாகி விட்டனர். ஒரு சிலருக்கு கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ளது. அவ்வாறு ஜாமீன் பெற்றவர்களும் தமிழகத்துக்கு வந்து கையெழுத்திடவே தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மக்களிடம் பீதியை, அச்ச உணர்வை பரப்பியவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவை 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்கள் ஆகும். பீகாரில் தான் தொடக்கத்தில் வதந்தி பரவியுள்ளது. முன்ஜாமீன் கேட்டால் அதை ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் காவல்துறை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் திருப்பூர் ஆண்டிப்பாளையத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் பனியன் நிறுவனத்துக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களிடம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கலெக்டர் வினீத், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.