கோர ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது - ஆய்வுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
கோர ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
சென்னை,
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒடிசா கோர ரெயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்து களப்பணி ஆற்றுவர்.
மூன்று ரெயில்கள் மோதி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.