கோமாரிநோய் தடுப்பூசி பணிகள்

தஞ்சை மாவட்டத்தில் கோமாரிநோய் தடுப்பூசி பணிகள்

Update: 2023-03-09 18:45 GMT


தஞ்சை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 4 மாத வயதுடைய கன்று முதல் சினை, கறவை பசு உள்ளிட்ட அனைத்து பசுமாடுகள் மற்றும் எருமை, காளை இனங்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 92 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தஞ்சையை அடுத்த கொ.வல்லுண்டாம்பட்டு பகுதியில் நேற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கிருந்த கால்நடைகளின் உரிமையாளர்களிடம், முறையாக கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறதா? தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளுக்கு காதுவில்லைகள் முறையாக அணிவிக்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் பழனிவேல், கால்நடை உதவி மருத்துவர் செரீப் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் நடந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்