தங்க நாற்கர சாலை வாஜ்பாயின் கனவு திட்டம்: பா.ஜ.க.வின் சாதனைகளை தங்கள் சாதனை என்று சொல்வதா? அண்ணாமலை அறிக்கை

தங்க நாற்கர சாலை வாஜ்பாயின் கனவு திட்டம் என்றும், பா.ஜ.க.வின் சாதனைகளை தங்கள் சாதனை என்று சொல்வதா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2023-01-08 18:34 GMT

பா.ஜ.க.வின் சாதனைகள்

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் 'பாதை மாறாப் பயணம்' நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நூலாசிரியரை பற்றி குறிப்பிடும்போது, 'தங்க நாற்கர சாலையை அமைத்து தந்தவர் டி.ஆர்.பாலு' என்று குறிப்பிட்டார். அடுத்தவர்கள் சாதனை எல்லாம், தங்கள் கணக்கிலே வரவு வைத்துக்கொள்ளும், அவருடைய பழக்கம் இன்னும் மாறவில்லை என்று தெளிவாக தெரிகிறது. உலகத்துக்கே தெரியும் தங்க நாற்கர சாலை திட்டம் என்பது மாட்சிமைமிக்க, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டம். இந்த திட்டம் 1999-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி தொடங்கப்பட்டது.

டி.ஆர்.பாலு நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக பதவி வகித்த காலம் 22.5.2004 முதல் 22.5.2009 வரை. ஜூலை மாதம் 2013-ல் இந்த திட்டம் முழுமையாக நிறைவேறியது. ஆக தொடக்கத்திலும், முடிவிலும் இல்லாமல் இடையில் மந்திரியாக இருந்தவர், எப்படி, இந்த திட்டத்தை தன்னுடைய தனிப்பட்ட சாதனையாக கூற முடியும். எப்படி நாக்கு கூசாமல் பா.ஜ.க.வின் சாதனைகளை எல்லாம், தங்கள் சாதனைகளாக சொல்லி கொள்கிறார்களோ தெரியவில்லை.

கவலை

'சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால், தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும். சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலுதான் முன்னெடுத்தார். ஆனால் அதனை பா.ஜ.க.தான் தடுத்து நிறுத்தியது' என்று முதல்-அமைச்சர் குறை பேசினார். பெரும் கப்பல்கள் செல்ல முடியாத அளவுக்கு மணல் திட்டுகள் அதிகம் உள்ள ஆழ்கடல் பகுதியில் இருந்து மண்ணை அள்ளி, அதே கடலுக்குள் மிக ஆழமான பகுதியில் வீசவேண்டும். கடலுக்குள் இருந்து மண்ணை அள்ளி கடலுக்குள்ளே வீசுவதால், எவ்வளவு வேலை முடிந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கமுடியாது. இதற்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி செலவு பிடிக்கும்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் கூட, ஒரு நேரத்தில் ஒரு கப்பல் மட்டும் தான் இதன் வழியே செல்லமுடியும். அதாவது ஒரு வழி பாதையாக மட்டும்தான் கப்பல்கள் செல்லமுடியும். ஒருவேளை இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், எத்தனையோ பயன்களை டி.ஆர்.பாலுவும், தி.மு.க.வும் அடைந்திருக்கும் அருமையான வாய்ப்பு உருவாகி இருக்கும். ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் தூத்துக்குடி துறைமுகத்தை வணிக ரீதியாக சிறப்பாக எப்படி நடத்துவது? என்ற அடிப்படை சிந்தனை கூட இந்த அரசுக்கு இல்லை. ஆனால் இல்லாத துறைமுகத்தை பற்றி கவலை கொள்கிறார்கள்.

சேது சமுத்திர திட்டம்

இந்தியர்களின் பாரம்பரிய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து, அங்கே அறிவியல் சாத்தியமில்லாத நீர் வழித்தடத்தை உருவாக்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட சேது சமுத்திர திட்டம் நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் மானம்தான் கப்பலேறி இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்