மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் நகை திருட்டு
தஞ்சையில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் நகையை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் நகையை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூதாட்டியிடம் நகை திருட்டு
தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றிநகரை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி அமுதா (வயது65). சம்பவத்தன்று இவர் பால் வாங்குவதற்காக வீடடில் இருந்து வெளியே வந்து தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். வைரம்நகர் பகுதியில் அவர் நடந்து சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென அமுதாவிடம் வந்து பேசினர். அப்போது அந்த 2 பேரும் நகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு தனியாக வருகிறீர்களே? யாராவது பறித்து கொண்டு சென்று விடுவார்கள் என அறிவுரை கூறுவது போல் அமுதாவிடம் நடித்தனர்.பின்னர் கழுத்தில் அணிந்துள்ள நகைகளை கழற்றி கொடுங்கள். நாங்கள் பாதுகாப்பாக பேக்கில் வைத்து கொடுக்கிறோம் என அமுதாவிடம் கூறினர். இதை உண்மை என்று நம்பிய அமுதா தான் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை கழற்றி அந்த 2 பேரிடமும் கொடுத்தார். அந்த சங்கிலியை பெற்று கொண்ட மர்மநபர்கள் அதுாவின் கவனத்தை திசை திருப்பியதுடன் தாங்கள் வைத்திருந்த பேக்கில் நகையை வைக்காமல் கூலாங்கற்களை வைத்து கொடுத்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
நகைகளுடன் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். வீட்டிற்கு சென்ற பிறன்னர் பேக்கில் நகைகள் இருக்கிறதா? என பார்த்தபோது நகைக்கு பதிலாக கூலாங்கற்கள் இருப்பதை கண்டு அமுதா அதிர்ச்சி அடைந்தார். அப்போது தன்னை மர்மநபர்கள் 2 பேரும் ஏமாற்றிவிட்டு 3 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டதாக உணர்ந்தார். பின்னர் இது குறித்து அவர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.