அடகு நகை கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

போயம்பாளையம் அருகே 2 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட அடகு நகை கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-09 18:33 GMT

போயம்பாளையம் அருகே 2 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட அடகு நகை கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

2 மாதமாக பூட்டிக்கிடந்த அடகு கடை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த இடையபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். இவர் திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம்- பொம்மநாயக்கன்பாளையம் சாலையில் "முருகா பைனான்சியர்ஸ்" என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வந்தார். அங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 200 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தனர். இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற சதீஸ் பின்னர் திரும்பி வரவில்லை.

கடந்த 2 மாதங்களாக அவருக்கு சொந்தமான நகை அடகு கடை பூட்டியே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் சதீஸ் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை போயம்பாளையத்திற்கு வந்த சதீஸ் அவருடைய கடையை திறந்துள்ளார்.

முற்றுகை

இதுபற்றி தகவலறிந்ததும் சம்பந்தப்பட்ட நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கடையை முற்றுகையிட்டனர். மேலும் கடை உரிமையாளர் சதீசிடம் தங்களுடைய நகைகளை வழங்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கடை உரிமையாளர் சதீஸ், வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான நகை அருகில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் இருப்பதாகவும், அதை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வாங்கி அந்தந்த வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

சுழற்சி முறையில் கண்காணிப்பு

மேலும் வங்கியில் உள்ள நகையை மீட்பதற்கான பணம் தன்னிடம் இருப்பதாக கூறி, அந்த பணத்தையும் வாடிக்கையாளர்கள் மற்றும் போலீசாரிடம் சதீஸ் காட்டி உள்ளார்.

இதனால் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் திங்கட்கிழமை வரை வாடிக்கையாளர்களில் தலா 4 பேர் சுழற்சி முறையில் அங்கேயே இருந்து கடையை கண்காணிக்கவும் முடிவு செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்