போலீஸ் தேடிய 2 பேர் கைது

மூதாட்டியை கட்டிப்போட்டு 5 பவுன் நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-06 20:29 GMT


மூதாட்டியை கட்டிப்போட்டு 5 பவுன் நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாடகை வீடு

தஞ்சை அருளானந்தம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஸ்தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ்மேரி (வயது 85). ஸ்தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுடைய மகன், மகள் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். எனவே ஆக்னஸ்மேரி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.ஆக்னஸ்மேரி தன்னுடை வீட்டின் மாடியை வாடகைக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் வீட்டின் கேட்டில் அறிவிப்பு பலகை வைத்திருந்தார். சம்பவத்தன்று இந்த அறிவிப்பு பலகையை பார்த்த மர்மநபர்கள் ஆக்னஸ்மேரியின் வீட்டிற்கு சென்று வீட்டை பற்றி விசாரித்துள்ளனர். மேலும் வீடு வாடகைக்கு கேட்டுள்ளனர். இதனை நம்பிய அவர் அந்த மர்மநபர்களை மாடி அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

நகை பறிப்பு; 2 பேர் கைது

மாடி அறைக்குள் சென்றவுடன் பின்னால் வந்த அவர்கள் ஆக்னஸ்மேரியை அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்து கட்டிபோட்டனர். பின்னர் அவர்கள், மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகைகளை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் தீவிர கண்காண்ப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து சென்றதாக தஞ்சை வடக்குஅலங்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், மேலவெளி தோட்டம் சிங்கபெருமாள் குளம் பகுதியை சேர்ந்த மில்லர் (60) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் அவர்கள் 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்