அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; தனுஷ்கோடி ஆதித்தன் அணிவித்தார்
நெல்லையில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் அணிவித்தார்.;
நெல்லையில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் அணிவித்தார்.
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், ராகுல்காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஏற்பாட்டில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
மாநில வக்கீல் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்ககுமார், பரணி இசக்கி, மாரியம்மாள், மூத்த தலைவர் லெனின் பாரதி, மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளப்பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் மகேந்திரன், கே.எஸ்.மணி, ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் தனசிங் பாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், மண்டல தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதரவற்றோர் இல்லம்
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா, பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ் தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார்.
விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி.மனோகரன் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கேக் வெட்டி, காலை உணவு வழங்கினர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்கினார்கள்.
ஓ.பி.சி. பிரிவு மாநில செயலாளர் அல்அமீன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, பாளையங்கோட்டை வட்டார தலைவர் கனகராஜ், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டியன், மாநகர் மாவட்ட ராஜீவ்காந்தி அமைப்பு தலைவர் தனசிங் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பை
அம்பை நகர காங்கிரஸ் சார்பில், அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் ராம்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.