தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாள் விழா: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடிஅரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி:
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடிஅரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
பிறந்தநாள்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து நேற்று முழுவதும் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
மாலை அணிவிப்பு
தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு அமைந்து உள்ள கருணாநிதியின் உருவச்சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதே போன்று தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே பிரமாண்டமான கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கல்வி உபகரணங்கள்
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் அமைந்து உள்ள அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிக்கு அடிப்படை கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் எந்த குறைபாடும் இன்றி நல்லமுறையில் படிக்க வேண்டும். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காகவே உங்களது பெற்றோர்கள் உங்களை விடுதிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு அரசு வழங்கும் பல நல்ல திட்டங்களை பயன்படுத்தி நல்லமுறையில் பயின்று சமுதாயத்தில் தலைசிறந்த தலைவர்களாக, அலுவலர்களாக, கல்வியாளர்களாக, தொழில் அதிபர்களாக, ஆட்சியாளர்களாக முன்னேற வேண்டும்.
சுகாதாரம்
மேலும் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். இதற்காக குப்பையை குப்பை தொட்டியில் போட வேண்டும். பெரும்பாலான மக்கள் மனித கழிவுகளை நேரடியாக மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவுநீர் ஓடைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொதுவழிகளில் திறந்து விடுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் பலவிதமான தொற்று ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, கழிவுநீர் தொட்டி கட்டவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.