தாராபுரம்,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
கருணாநிதி பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 3-ந் தேதி பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசாக அணிவித்தார். இதனைத் தொடர்ந்து குளத்துப்பாளையம் பேரூராட்சி அண்ணா நகர், காந்திஜி நகர், கரையூர், ராமமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதியில் தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
காந்திஜி நகரில் 99 முதியோருக்கு போர்வை வழங்கப்பட்டது. கொளத்துப்பாளையம் பேரூராட்சி ஆலாம்பாளையம் பகுதியில் 35 ஏக்கர் நிலப் பரப்பளவில் உடையார் குளம் அமைந்துள்ளது. இதற்கு மழைக்காலங்களிலும் அமராவதி ஆற்றில் தண்ணீர் விவசாய பாசனத்துக்கு அணை திறக்கும் போது நல்லதங்காள் அணையில் தேங்கும். அப்போது அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழை நீர் உடையார் குளத்தில் 6 மாதங்களுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும்.அப்போது இந்த ஏரியிலிருந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால் 5 கிராமங்களில் விவசாயம் பெருகி வந்தது.நிலையில் கடந்த 10 ஆண்டுகாலமாக முட்புதர்கள் வளர்ந்து உள்ளதால் மழைக்காலங்களில் இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் முழுவதும் முட்புதர்கள் உறிஞ்சி கொள்வதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு அப்பகுதி விவசாயிகள் அமைச்சர் கயல்விழி செல்வராஜை சந்தித்து குளத்தை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த ஏரியை தூர்வார ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
தூர்வாரும் பணி
அதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு தூர்வாரும் பணியை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கே. செல்வராஜ், தாராபுரம் பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் டாக்டர் சிவபாலன், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, துணை தலைவர் துரைசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக குண்டடம் பகுதியில் கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளானது. அதில் படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.