தவிக்க வைக்கும் தங்கம்! பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்

Update: 2022-12-05 18:45 GMT

அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது.

ஏழை எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்ககாரியங்கள் நடப்பது இல்லை.

அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற இதரச் சொத்துகள் வீழ்ச்சி அடையக்கூடும். ஆனால் தங்கம் எப்போதும் முன்னணியிலேயே நிற்கும். நிதி நெருக்கடியா? தங்கத்தை அடகுவைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கிகொள்ள முடியும்.

விலை நிர்ணயம்

இந்தியாவுக்கு துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் மும்பைதான் தங்க 'நெட்வொர்க்' மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்தே இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தங்கம் 'சப்ளை' செய்யப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது, 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேசன்'தான். ஒவ்வொரு நாளும் (விடுமுறை நாட்களை தவிர) காலை 10.30 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் அமெரிக்க டாலர்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை மையமாக வைத்தும், இன்சூரன்ஸ், இறக்குமதி வரி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றையும் சேர்த்தும் அனைத்து நாடுகளிலும் விலை நிர்ணயம் ஆகிறது.

இந்தியாவில் மும்பையில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகச்சந்தையில் எப்படி காலை, மாலையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் இங்கும் விலை தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறாக விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கத்தின் விலை ஆண்டுக்காண்டு மேல்நோக்கியே பயணிக்கிறது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை

1920-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21-க்கு விற்பனை ஆன நிலையில், 2001-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 368 ஆகவும், 2011-ம் ஆண்டில் ரூ.22 ஆயிரத்து 104 ஆகவும் உயர்ந்துகொண்டே வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத விலை உயர்வாக இது இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விலை சற்று குறையத் தொடங்கி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது.

இப்படியாக தொடர்ந்து தங்கம் விலை ரூ.36 ஆயிரத்திற்கும் ரூ.40 ஆயிரத்திற்கும் இடையில் இருந்துவந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கிய நேரத்தில், முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். இதனால் அதன் விலையும் சற்று சரிந்து காணப்பட்டது. அதையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை பெருமளவில் ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஒரு பவுன் ரூ.40 ஆயிரம்

கடந்த மார்ச் மாதம் 7, 8, 9-ந் தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 14, 15, 16, 17, 18, 19-ந் தேதிகளிலும் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டுவந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவருவதை பார்க்க முடிகிறது.

கடந்த 2-ந் தேதியன்று மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் தங்கம் விலை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

தர்மபுரி நகை வியாபாரிகள் சங்க செயலாளர் நாகராஜன்:-

உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் பண வீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால் விலைவாசி தொடர்ந்து அதிகரிக்கிறது. இதன் ஒரு பகுதியாக இப்போது தங்கத்தின் விலையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

உலக பொருளாதார மந்த நிலை, பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள முதலீடு சரிவு ஆகியவற்றின் காரணமாகவும் தங்கம் விலை உயர்வதாக கூறுகிறார்கள். இந்த விலை உயர்வு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்க நகைகள் வாங்கும் சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

விற்பனையை பாதிக்கும்

தர்மபுரி சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சக்திவேல்:-

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளாக நகை விற்பனை குறைந்து உள்ளது. இதனால் இந்த தொழிலில் முதலீடு செய்துள்ள பலர் பல கோடி ரூபாய் கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

இந்தநிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விற்பனையை பாதிக்கும். பொதுமக்கள் தங்கத்தை வாங்குவது குறையும். இதன் காரணமாக தங்க விற்பனை குறைவதால் நகை விற்பனையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

மவுசு குறைய வாய்ப்பில்லை

பாலக்கோட்டை சேர்ந்த நகை வணிகர் நாம்தேவ்:-

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிற்கேற்றவாறு தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏறு முகத்தில் உள்ளது. இருந்தபோதிலும் தங்க விற்பனை நன்றாகவே நடக்கிறது.

தங்கம் நகைகளாக மட்டுமின்றி, முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அவசர காலங்களில் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. எனவே தங்கத்தின் மவுசு எப்போதும் குறைய வாய்ப்பில்லை. தங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இதற்கு முக்கிய காரணம்.

ஆர்வம் குறைந்து விடும்

கடைமடையை சேர்ந்த குடும்பத் தலைவி விஷாலி:-

திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு தங்க நகைகளை கட்டாயம் வாங்கி தான் ஆக வேண்டும். இந்தநிலையில் தங்கத்தின் விலை உயர்வு ஏழை நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். விலைவாசி உயரும் வேகத்திற்கு ஏற்ப சாதாரண மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றால் சாதாரண மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வமும், ஆசையும் குறைந்துவிடும்.

இப்போதே பெண்கள் தங்கத்தைவிட கவரிங் நகைகள் மீது தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே சென்றால் தங்கம் என்பது சேமிப்பு பொருளாக மட்டுமே பார்க்கப்படும்.

கூடுதல் சுமை

கே.ஈச்சம்பாடியை சேர்ந்த குடும்பத் தலைவி பிரியங்கா:-

விவசாய குடும்பம் என்றாலும், வியாபார குடும்பம் என்றாலும் திடீரென உடனடியாக பணம் வேண்டுமென்றால் தங்க நகைதான் கைகொடுக்கிறது. தங்கத்தின் விலை உயர்வு திருமணம் நடக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதனால் சாதாரண மக்கள் தங்கம் வாங்கும் அளவு குறைய வாய்ப்புள்ளது. தங்கம் விலை உயர்வு ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் தங்கம் வாங்குவதை முழுமையாக தவிர்க்க முடியாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தங்கம் விலை கடந்து வந்த பாதை...

ஆண்டு - விலை (8 கிராம் கொண்ட ஒரு பவுன்)

1920- ரூ.21

1961- ரூ.104

1980- ரூ.1,136

1996- ரூ.4,000

2001- ரூ.3,368

2010- ரூ.15,448

2015- ரூ.21,424

2020- ரூ.31,168

2021- ரூ.37,880

2022 (ஜனவரி)- ரூ.36,472

2022 (டிசம்பர் 2-ந்தேதி)- ரூ.40,160

------

இதையும் அறிந்துகொள்ளலாமே?

* 'கேரட்' என்பது தங்கத்தின் தூய்மையை குறிப்பது ஆகும். இதில் எந்தெந்த கேரட்டில் எவ்வளவு சதவீதம் தங்கம் இருக்கும் என்ற விவரத்தை பார்க்கலாம்: 24 கேரட்- 99.9 சதவீதம், 23 கேரட்- 95.6 சதவீதம், 22 கேரட்- 91.6 சதவீதம், 21 கேரட்- 87.5 சதவீதம், 18 கேரட்- 75 சதவீதம், 17 கேரட்- 70.8 சதவீதம், 14 கேரட்- 58.5 சதவீதம், 10 கேரட்- 41.7 சதவீதம், 9 கேரட்- 37.5 சதவீதம், 8 கேரட்- 33.3 சதவீதம்.

* தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

* சர்வதேச அளவில் வீடுகளில் அதிகம் தங்கம் வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்குத்தான் முதலிடம். அதேபோல அரசாங்கத்தின் சார்பில் அதிகத் தங்கம் இருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

------

தங்கம் அதிக அளவில் வைத்திருக்கும்

முதல் 10 நாடுகள்

அமெரிக்கா - 8,133.47 டன்

ஜெர்மனி - 3,358 டன்

இத்தாலி - 2,451 டன்

பிரான்ஸ் - 2,436 டன்

ரஷியா - 2,298 டன்

சீனா - 1,948 டன்

சுவிட்சர்லாந்து - 1,040 டன்

ஜப்பான் - 845 டன்

இந்தியா - 757 டன்

நெதர்லாந்து - 612 டன்

மேலும் செய்திகள்