புதுக்கோட்டை அருகே அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு.!
அகழாய்வு பணியின்போது இன்று மூன்று முக்கிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடையாளங்களும், தொல்லியல் சார்ந்த பொருட்களும் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கள ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்டது. இந்த கோட்டையானது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
கீழடி, ஆதிச்சநல்லூரில் கிடைத்தவை போன்ற அதே தன்மையுடைய கூரை ஓடுகள் உள்ளிட்டவை பொற்பனைக்கோட்டையிலும் கிடைத்தன. இதையடுத்து தமிழக அரசின் தொல்லியல் துறையே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியை சமீபத்தில் தொடங்கியது. இதில் தொல்லியல் துறையினர், தொல்லியல் படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த அகழாய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அகழாய்வு பணியின்போது இன்று மூன்று முக்கிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தங்க ஆபரணத்தை முதல் முறையாக இங்கு கண்டறிந்துள்ளனர். ஆறு இதழ்களை கொண்ட இந்த தங்க ஆபரணமானது மூக்குத்தி அல்லது தோடு வடிவில் உள்ளது.
மேலும், எலும்பு முனை கருவி மற்றும் கார்னீலியன் பாசி மணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கார்னீலியன் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பகுதியில் அகழாய்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.