வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
மூலனூர்,
மூலனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருட்டு
தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே உள்ள நத்தப்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் முனியப்பன். அவரது மனைவி சரஸ்வதி. இருவரும் கூலிவேலை செய்து வருகிறார்கள். இவர்களது மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் முனியப்பன் மற்றும் அவரது மனைவி இருவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று விட்டனர். அவருடைய மகனும் வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் வேலைக்கு சென்ற முனியப்பன் மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசில் புகார்
இதையடுத்து மூலனூர் போலீஸ் நிலையத்தில் முனியப்பன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்தனர். பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். தொழிலாளியின் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டுப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.