போலீசாரை கண்டித்து நகை பட்டறைகள் கடைகள் அடைப்பு

மது குடித்து 2 பேர் பலியானது தொடர்பாக போலீசார் சிலரை அழைத்து சென்று விசாரிப்பதை கண்டித்து நகை பட்டறைகள்-கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-07 20:34 GMT

தஞ்சாவூர்;

மது குடித்து 2 பேர் பலியானது தொடர்பாக போலீசார் சிலரை அழைத்து சென்று விசாரிப்பதை கண்டித்து நகை பட்டறைகள்-கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்றது.

மது குடித்து 2 பேர் பலி

தஞ்சை கீழஅலங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த மாதம் 21-ந் தேதி மது குடித்த நிலையில் கீழவாசல் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி குப்புசாமி, கார் டிரைவர் விவேக் ஆகியோர் இறந்தனர். அவர்களது உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், உடலில் சயனைடு கலந்து இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் நகை தயாரிக்கும் பட்டறையில் சயனைடு வாங்கப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனால் போலீசார், கடந்த 15 நாட்களுக்கு மேலாக, யார் சயனைடு இறந்தவர்களுக்கு வழங்கியது என அடிக்கடி, நகை தயாரிப்பாளர்களின் பட்டறைக்கு சென்று ஆய்வு செய்வதுடன், விசாரணை என்ற பெயரில் சிலரை போலீசார் அழைத்து சென்று, அவர்கள் மீது வழக்கு போட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

போராட்டம்

இதை கண்டித்து தஞ்சை அய்யங்கடை தெருவில், நகை தயாரிப்பாளர்கள் பட்டறைகளையும், கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட பட்டறைகள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரவையின் நகர தலைவர் வாசு, நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சேகர், நகை தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, தற்போது நகை தயாரிப்புக்கான சயனைடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதால், தொழில் செய்வது பிரச்சினையாக உள்ளது. இதனால், நகை தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்