தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
தஞ்சை அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி அருகே உள்ள சிட்டிசன் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி காயத்ரி (வயது 35). நேற்று முன்தினம் இரவு காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் ஒரு அறை டிராயரில் இருந்த நகை மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கத்தையும் திருடி சென்றனர். பின்னர் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த காயத்ரி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.
வலைவீச்சு
இதனால் திடுக்கிட்டு எழுந்த காயத்ரி திருடன்.. திருடன்... என கூச்சலிட்டார்.இந்த சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு ஓடி வந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.65 ஆயிரமும், ரூ.3500 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.