காக்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகை திருட்டு
காக்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.;
வீட்டின் பூட்டை உடைத்து...
திருவள்ளூர் அடுத்த காக்களூர், மாருதி நியூடவுன், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மேஷாக் (வயது 40). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 35). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மேஷாக் தனது மனைவி பிள்ளைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் 17-ந் தேதி மேஷாக் மட்டும் வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
17 பவுன் திருட்டு
அன்று மாலை சரண்யா பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சரண்யா திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.