3 வீடுகளில் தங்கக்காசுகள்-ரூ.60 ஆயிரம் திருட்டு
3 வீடுகளில் தங்கக்காசுகள்-ரூ.60 ஆயிரம் திருட்டுபோனது.
மளிகைக்கடை உரிமையாளர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகமூர்த்தி (வயது 63). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு கடையுடன் இணைந்துள்ள வீட்டில் தூங்காமல், அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனது மனைவி விஜயாவுடன் தூங்கச்சென்றார்.
பின்னர் நேற்று அதிகாலை கடையை திறக்க அவர் வந்தபோது வீட்டு வாசல் கதவின் பூட்டு உடைக்கட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்தும், கடையில் உள்ள கல்லாப்பெட்டியை உடைத்தும் அதில் இருந்த 8 கிராம் தங்கக்காசு, ஆயிரம் ரூபாய் ஆகியவை திருட்டு போயிருந்தது.
தங்கக்காசு-பணம் திருட்டு
இதேபோல் கொளக்காநத்தம் தட்டார தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). இவருக்கு சொந்தமான ஓட்டு வீடும், புதிய மாடி வீடும் அருகருகே உள்ளது. நேற்று முன்தினம் இவர், தனது மனைவி வசந்தாவுடன் புதிய வீட்டில் தூங்கச் சென்றார். நேற்று அதிகாலை எழுந்து சென்று பார்த்தபோது ஓட்டு வீட்டின் பூட்டு கொண்டியுடன் நெம்பப்பட்டு, கதவு மூடிய நிலையில் இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த அரை பவுன் தங்கக்காசு, ரூ.50 ஆயிரம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, நிலம் மற்றும் வீட்டு பட்டா ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் கொளக்காநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான சீனிவாசன்(80) உடல்நிலை சரியில்லாததால், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, அவரது மனைவி மலர் கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்படு அதில் இருந்த வெள்ளிக்கொலுசு, வெள்ளி குங்கும சிமிழ், வெள்ளி காசு மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் விரைந்து சென்று, திருட்டு நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. ஒரே நாள் இரவில் ஆள் இல்லாத 3 வீடுகளை மர்மநபர்கள் நோட்டமிட்டு தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். மேலும் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.