குடவாசல் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு

குடவாசல் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு

Update: 2023-04-16 18:45 GMT

சேர்க்கையை அதிகப்படுத்த குடவாசல் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என வீடு, வீடாக சென்று தலைமை ஆசிரியை துண்டுபிரசுரம் வழங்கினார்.

சேங்காலிபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 2023-24-ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும், அந்த மாணவ-மாணவிகளுக்குள் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்கப்பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அந்தப்பள்ளி சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பள்ளி கடந்த 2008-ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளது. அதேபோல் கர்மவீரர் காமராஜர் விருது மூலம் ரூ.25 ஆயிரத்தையும், பெற்றோர் ஆசிரியர் கழக விருதாக ரூ.50 ஆயிரத்தையும் பெற்றுள்ளது.

துண்டு பிரசுரம்

இந்த விருது தொகை முழுவதும் பள்ளியின் உட் கட்டமைப்பு வசதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாக இந்த பள்ளியில் கல்வி சீர் விழா நடைபெற்று வருகிறது. இதில் வருடம் தோறும் பிப்ரவரி மாதம் ஊர் மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கி சீர்வரிசையாக எடுத்து வந்து கொடுக்கும் விழா நடைபெற்று வருகிறது. நான்கு வருடத்தில் இதுவரை ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த பள்ளியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இந்திரா ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம், மாணவர் அறிமுக விழா போன்றவை நடத்தப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வருகிறார்.

தங்க நாணயம்

அந்த துண்டு பிரசுரத்தில் இந்த கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும், குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாள் அன்று அவருக்கு தங்க நாணயம் வழங்கப்படும். இந்த ஆண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவச வேன் வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த துண்டு பிரசுரத்தில் பள்ளியின் சிறப்பம்சங்களாக பாதுகாப்பான உட்கட்டமைப்பு வசதிகள் நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் மாணவர்களுக்கான 14 வகை விலையில்லா அரசு நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்க தொகைகள், அரசு வேலையில் முன்னுரிமை போன்ற பல்வேறு சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் உங்கள் அன்பு தங்கத்தை சேர்ப்பீர் தங்க நாணயம் வெல்வீர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துண்டு பிரசுரத்தை இந்திரா வீடு, வீடாக சென்று வழங்கி வருகிறார்.

மழைக்காலங்களில் வேன் வசதி

இதுகுறித்து தலைமை ஆசிரியர் இந்திரா கூறுகையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு எங்கள் பள்ளியில் வருடம் தோறும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில் இந்த கல்வி ஆண்டில் சேரக்கூடிய மாணவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து தங்க நாணயம் வழங்க உள்ளோம். அதேபோன்று பள்ளியில் சேருகின்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். அதேபோன்று ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மழைக்காலங்களில் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு ஏதுவாக வேன் வசதி ஏற்பாடு செய்ய உள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்