விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

செம்பனார்கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சிலைகள் வர்ணம் தீட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

Update: 2023-09-08 19:15 GMT

பொறையாறு;

செம்பனார்கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சிலைகள் வர்ணம் தீட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மணக்குடி கிராமத்தை சேர்ந்த பொம்மைகள் செய்யும் தொழிலாளர்கள் நவராத்திரி கொலு பொம்மைகள், விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் தொழில் செய்து வருகின்றனர். இதில் 3 அடி முதல் 15 அடி உயரம் வரை தயாரிக்கப்படும் சிலைகளான கற்பக விநாயகர், எலி வாகனத்தில் விநாயகர், வீர விநாயகர், லட்சுமி விநாயகர், கருட விநாயகர், காளிங்க விநாயகர், பள்ளிகொண்ட விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல்

தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவுப்படி ரசாயன கலவை இல்லாமல் மரக்கூழ், காகிதம், பசை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாதவாறு சிலைகளை செய்து வருகின்றனர். தற்போது சிலைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. பல்வேறு வர்ணங்களில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் இந்த சிலைகள் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது. இந்த சிலைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

காகிதக்கூழ்

இது குறித்து சிலைகள் செய்யும் தொழிலாளி குலோத்துங்கன் கூறியதாவது விநாயகர் சதுர்த்தி நெருங்கும் வேளையில் விநாயகர் சிலைகள் செய்து வருகிறோம். நவராத்திரி விழாவுக்கு கொலு பொம்மைகளையும் செய்து கொடுத்து வருகிறோம். விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்்கும் போது சுற்றுச்சூழலுக்்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டு உள்ளதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மரவள்ளிக்கிழங்கு, காகிதக்கூழ் ஆகியவை மூலம் சிலைகளை தயார் செய்து வருகிறோம். இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைத்தால் தீங்கு ஏற்படாது. 4 தலைமுறையாக எங்கள் குடும்பத்தினர் விநாயகர் சிலைகள் மட்டும் செய்கிறோம்.

வருமானம் இல்லை

ஆனால் எங்களுக்கு வருமானம் போதவில்லை. எங்களுக்கு பொம்மைகள் மற்றும் விநாயகர் சிலைகள் செய்யும் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. வங்கிகள் மானியத்துடன் கூடிய வட்டி இல்லாத கடன் கொடுத்தால் எங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் வாழ்க்கை தரம் உயரும்.கொரோனா காலத்தில் சிலைகள் செய்ய முடியாமல் தவித்து வந்தோம். தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்