அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை தகுந்தவர்களிடம் கடவுள் ஒப்படைக்கிறார்-மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி பேச்சு

அறிவுசார்குறைபாடுடைய குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை தகுந்தவர்களிடம் கடவுள் ஒப்படைக்கிறார் என்று மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் பேசினார்.

Update: 2023-04-19 20:20 GMT

அறிவுசார்குறைபாடுடைய குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை தகுந்தவர்களிடம் கடவுள் ஒப்படைக்கிறார் என்று மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் பேசினார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு

அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்போட்டிகள் ஜெர்மனி நாட்டில் வருகிற ஜூன் மாதம் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க மதுரை பெத்சான் சிறப்பு பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

அவர்களையும், இந்திய ராணுவ மருத்துவமனையில் பணி நியமனம் பெற்ற இந்த பள்ளி மாணவரையும் வழியனுப்பும் விழாவும் நேற்று நடந்தது.

இந்த விழாவில் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் பங்கேற்று, மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

பிரமிப்பு

பின்னர் அவர் பேசியதாவது:-

அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகள் தங்களது திறமையை வெளிக்காட்டும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அதாவது, கடந்த ஆண்டு தான் மதுரையில் நடந்த சித்திரைத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை நேரில் கண்டேன்.

அப்போது அங்கு குவிந்திருந்த 10 லட்சம் பக்தர்களுக்கு நடுவில் என்னை கொண்டு சென்று நிறுத்திவிட்டனர். அங்கு கூடியிருந்தவர்கள் நம்பிக்கையும், உணர்ச்சிப்பெருக்கும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அப்போது எந்த மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில்தான் இப்போது இருக்கிறேன்.

தகுதியானவர்களிடம் ஒப்படைப்பு

சிலர், நாம்தான் இந்த உலகம். நமக்கு பின்பாக எதுவும் இல்லை என்று நினைக்கிறார்கள். இந்த குழந்தைகளின் பெற்றோர், நமக்குப்பின் இந்த குழந்தைகளின் நிலை என்ன? என்று நினைத்துப்பார்ப்பது சற்று கடினமானது. ஆனால் இந்த குழந்தைகளை கையாளும் பக்குவமும், திறமையும் உடையவர்களிடம் தான் கடவுள் இவர்களை ஒப்படைக்கிறார்.

எனவே மகிழ்ச்சியுடன் தங்களது பணிகளை அவர்கள் தொடர வேண்டும். பெத்சான் சிறப்பு பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் மகத்தான பணிகளை செய்து வருவது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வக்கீல் கு.சாமித்துரை, பாரத் சிறப்பு ஒலிம்பிக் பிராந்திய விளையாட்டு இயக்குனர் நாகராஜன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜா, முரளிகிருஷ்ணன், ரிஷிவந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பெத்சான் சிறப்பு பள்ளி முதல்வர் ரவிகுமார், ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்