மகா மாரியம்மன் கோவிலில் கோடாபிஷேக விழா
ஆடுதுறை மகா மாரியம்மன் கோவிலில் கோடாபிஷேக விழா நடந்தது.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை நமச்சிவாயபுரம் மேல தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் கோடாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நெல்லி மரத்து புத்தடி மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம், பால்குடம், அலகு காவடிகளை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு மலர்அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆடுதுறை நமச்சிவாயபுரம் மேல தெரு கிராம மக்கள் செய்திருந்தனர்.