திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.
திருமங்கலம்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.
ஆட்டுச்சந்தை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்து பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடக்கும். மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை போட்டிபோட்டு வாங்கிச் செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியில் இருந்து 9 மணி வரை கூட்டம் அதிகமாக இருக்கும்.
களைகட்டியது
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆட்டுச்சந்தை தொடங்கியது. வழக்கத்தைவிட அதிகமானோர் திரண்டனர். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பானையாகின. சந்தை களைகட்டி காணப்பட்டது.
ரூ.5 கோடிக்கு விற்பனை
நேற்று ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாகவே ஆடுகளின் விலை கூடுதலாக இருந்தது என்றும், அடுத்த சந்தையில் ஆடுகளின் விலை கட்டுக்குள் வரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.