தேவாரம் அருகே 22 ஆடுகள், மாடு மர்ம சாவு

தேவாரம் அருகே 22 ஆடுகள், ஒரு மாடு மர்மமான முறையில் இறந்தன.;

Update:2022-08-01 22:37 IST

தேவாரம் அருகே உள்ள பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே தகர கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதற்காக கொட்டகையை திறந்தார்.

அப்போது அங்கு 22 ஆடுகள் மற்றும் ஒரு மாடு வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லத்துரை உடனே தேவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார், உத்தமபாளையம் துணை தாசில்தார் கண்ணன், கால்நடை மருத்துவர் சிவசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து விசாரணை நடத்தினர்.

ஆனால் ஆடுகள் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் இறந்துபோன ஆடுகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்து ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனர். இதன் முடிவு வந்த பிறகு தான் ஆடுகள் எப்படி இறந்தன என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்