திருப்புல்லாணி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் துரைச்சாமி (வயது 49). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை திருப்புல்லாணி பிள்ளையார்கூடம் ஊருணிக்கு தெற்கே உள்ள வயல்காட்டில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் வண்டியை நிறுத்தினர். அதில் ஒருவர் இறங்கி வந்து துரைச்சாமியின் ஆடு மற்றும் ஒரு குட்டியை திருடிக்கொண்டு செல்ல முயன்றார். இதனை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிடவே மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் தப்பிவிட்டனர். மேலும் ஆடு திருட முயன்ற பேராவூரை சேர்ந்த திருச்செல்வம் (33) என்பவரை மடக்கி பிடித்து திருப்புல்லாணி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்செல்வத்தை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.