ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி திருத்துறைப்பூண்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இந்த ஆடுகளை வெளியூர் வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.;

Update: 2023-01-12 19:15 GMT

கோட்டூர்;

பொங்கல் பண்டிகையையொட்டி திருத்துறைப்பூண்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இந்த ஆடுகளை வெளியூர் வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

மாட்டு பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படும் மாட்டு பொங்கல் பண்டிகையன்று மக்கள் தங்கள் வீடுகளில் இறைச்சி சமைப்பது வழக்கம். மாட்டு பொங்கல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திருத்துறைப்பூண்டி ஆட்டு சந்தை

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேதாரண்யம் சாலை பள்ளிவாசல் அருகே வியாழக்கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.இந்த சந்தைக்கு, மதுரை, ராஜகிரி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இது தவிர திருத்துறைப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகளும் தங்களது பண தேவைக்கு ஆடுகளை இந்த சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருத்துறைப்பூண்டி ஆட்டு சந்தையில் வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். தற்போது மாட்டு பொங்கல் நெருங்கி வரும் நிலையில் இந்த சந்தையில், நேற்று வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்தனர்.மேலும் ஆடுகளை வாங்குவதற்கும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனா்.நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் திருத்துறைப்பூண்டி சந்தையில் ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் கூறினர்.மாட்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், இத்தகைய கூட்டம் எதிர்பார்த்ததுதான் என சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்