ஞானபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-06-08 18:45 GMT


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தெய்வத்தமிழ்மாநாடு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகுருமுதல்வர் குருபூஜைவிழா, ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழா, பட்டணபிரவேசம் ஆகியவை ஆண்டுதோறும் நடைபெறும். இதில் சமயபயிற்சி வகுப்புகள், திருநெறிய தெய்வத்தமிழ்மாநாடு ஆகியவை இந்த 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முக்கிய திருவிழாவாக தேர் திருவிழா நடந்தது. ஞானாம்பிகை உடனான ஞானபுரீஸ்வரர் சாமி, விநாயகர், வள்ளி, தெய்வானை உடனான சுப்ரமணிய சாமி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் 2 தேர்களில் எழுந்தருளினர்.

2 தேர்களுக்கும் அர்ச்சனை

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையில் தேரோட்டம் தொடங்கியது. ஆதீன பங்களா முன்பு 2 தேர்களுக்கும் சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஆதீன குருமகா சன்னிதானம் வடம்பிடிக்க தேரோட்டம் நடந்தது.

ஆதீனத்தின் 4 வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொதுமேலாளர் கோதண்டராமன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்