சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன், ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன், ஜி.கே.வாசன் திடீரென சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Update: 2023-01-29 22:08 GMT

சேலம்,

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நேற்று மாலை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., சென்றார். அவரை எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து இருவரும் 25 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.

பேட்டி

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலின் போது தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இருக்கும். இதற்காக எதிரணியில் உள்ள அனைவரும் ஒரே அணியாக சேர வேண்டும்.

அ.தி.மு.க. வெற்றி

அப்படி ஒரே அணியாக சேரும்பட்சத்தில் மக்கள் நினைக்கும் மாற்றம் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் உறுதியாக ஏற்படும். கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியல் கூட்டணியில் தான் சுழன்று கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் வேட்புமனு தாக்கலுக்கு காலக்கெடு கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தேர்தல் பணிகளை அ.தி.மு.க. முறையாக தொடங்கும். தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குகளை முழுமையாக பெற்று வெற்றி பெறக்கூடிய பிரகாசமான சூழ்நிலை அ.தி.மு.க.வுக்கு உள்ளது.

மக்கள் கோபம்

தமிழகத்தில் மணிக்கு மணி, நாளுக்கு நாள் தி.மு.க.வை எதிர்த்து வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றக்கூடிய அரசாக தி.மு.க. உள்ளது. இதனால் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். இதனை இடைத்தேர்தலில் மக்கள் உறுதியாக பிரதிபலிப்பார்கள்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன், கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணி தற்போதும் தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்