பாதையை இலவச மனை பட்டாவாக கொடுப்பதா?குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரை விவசாயிகள் முற்றுகை

காட்டுமன்னார்கோவில் அருகே பாதையை இலவச மனை பட்டாவாக கொடுப்பதா? என்று கூறி, குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-02-24 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அது பற்றிய விவரம் வருமாறு:-

வண்டல் மண்ணுக்கு அனுமதி

மேல்புவனகிரி வேல்முருகன்: விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் செவ்வாய்க்கிழமைகள் தோறும் சப்- கலெக்டர் அலுவலகங்களில் குறைகேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். எங்கள் பகுதியில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு வரும் இடத்தில் உள்ள பழமையான மரத்தை அகற்றிவிட்டு கட்ட வேண்டும். மேலும் உலர் களத்தை சீரமைக்க வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு ஏரியில் வண்டல் மண் எடுக்க, விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

ரவீந்திரன்: கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு, சில விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக வழங்க வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆறுகள் நிறைந்த கடலூர் மாவட்டத்தில் கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக ஆறுகளின் படுக்கை மட்டம் குறைவாக உள்ளதால் கடல் நீர் ஊடுருவலை தடுக்க வேண்டும்.

பனை மரங்களை வெட்டக்கூடாது

ஸ்ரீமுஷ்ணம் முருகானந்தம்: நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பனை மரங்கள் அனைத்தும் செங்கல் சூளைக்காக வெட்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் புளிய மரங்களை வெட்டுவதால் புளி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பனை மரங்கள் மற்றும் புளிய மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும்.

குமராட்சி குஞ்சிதபாதம்: பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வாய்க்கால்கள் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவை மழைக்காலங்களில் மட்டுமே பெயரளவுக்கு அதிகாரிகள் தூர்வாருகின்றனர். அதனால் ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும். வடலூர்-பின்னலூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

பணம் மோசடி

கீழ்கவரப்பட்டு சிவக்குமார்: மேல்பட்டாம்பாக்கம் இந்தியன் வங்கியில் விவசாயிகள் அடகு வைத்த நகைகளின் மீது கூடுதலாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நகைகளுக்கான வட்டி, அசல் போன்ற தொகைகளை அதற்குண்டான தீர்வு கிடைக்கும் வரை வங்கி நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களை கட்டச்சொல்லி நிர்பந்தப்படுத்தக்கூடாது.

அதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்து பயன் பெறலாம் என ஆலோசனை வழங்கினார்.

முற்றுகை

அப்போது காட்டுமன்னார்கோவில் அருகே சர்வராஜன்பேட்டையை சேர்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டரை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், எங்கள் கிராமத்தில் 750 ஏக்கர் விளைநிலம் உள்ளது. அதில் நாங்கள் காலங்காலமாக பாதையாக பயன்படுத்தி வந்த இடத்தை தற்போது வருவாய்த் துறையினர் இலவச வீட்டுமனை பட்டா கொடுக்க முயற்சி செய்கின்றனர். அவ்வாறு இலவச பட்டா கொடுத்தால் விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும் பாசன வாய்க்காலும் பாதிக்கப்படும். அதனால் அந்த இடத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கே தொடர்ந்து பாதையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

அதற்கு கலெக்டர், இதுதொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்