'நீட்' விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குங்கள்: ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-08-15 00:26 GMT

சென்னை,

மருத்துவப்படிப்பில் சேர நடத்தப்படும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் 'நீட்' விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஆர்.என்.ரவி மூலமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

தந்தை-மகன் தற்கொலை

'நீட்' தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை செல்வசேகரும் உயிரை மாய்த்துக்கொண்டார்.

நீட் தேர்வால் தந்தையும், மகனும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

ஜனாதிபதிக்கு கடிதம்

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில்ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூடுதல் சுமை

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை (நீட்) தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது. அடிப்படையிலேயே ஏழை-எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்த தேர்வு முறை உள்ளது.

நீட் போன்ற நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும். நுழைவு தேர்வு முறை மாணவர்களுக்கு தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்தாக உள்ளது.

நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆராய்ந்திட ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது.

இந்த குழுவின் அறிக்கை மற்றும் பல்வேறு விவாதங்களின் அடிப்படையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு 2021 தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு, 18-9-2021 அன்று தமிழ்நாடு கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

மன அழுத்தம்

கவர்னரால் 5 மாத காலத்துக்கு பிறகு இந்த சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டது. 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்த சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்கு பிறகு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக கவர்னருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது.

கவர்னர் இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவு தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 21-6-2022 அன்று கோரியிருந்த விளக்கங்கள், மத்திய உயர்கல்வி அமைச்சகம் 26.8.2022, 15.5.2023 ஆகிய தேதிகளில் கோரியிருந்த விளக்கங்கள், மத்திய ஆயுஷ் அமைச்சகம் 13.1.2023 அன்று கோரியிருந்த விளக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பெறப்பட்டது.

மத்திய அமைச்சகங்கள் கோரி இருந்த அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு விரைவாக வழங்கியது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாததால், நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் மிகுந்த கவலையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒப்புதல் அளிக்கவேண்டும்

நீட் தேர்வின் மூலம் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் மாணவர்களும், சில நிகழ்வுகளில் அவர்களது பெற்றோர்களும் தற்கொலை செய்து கொள்ளும் பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்துள்ளது கவலையாக உள்ளது. அண்மையில் கூட, நீட் தேர்வில் தோல்வியடைந்த மன உளைச்சலில், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஒருவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டனர். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ்-2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும்.

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு. அதனை செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்ல, சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்