கல்லூரி பருவத்திலேயே மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்

எதிர்காலம் சிறப்பாக அமைய கல்லூரி பருவத்திலேயே மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார்.

Update: 2022-12-01 18:45 GMT

எதிர்காலம் சிறப்பாக அமைய கல்லூரி பருவத்திலேயே மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு கூட்டம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

இன்றைய இளைய சமுதாய மாணவிகள் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும். மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். பெண்கள் நம்முடைய உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். நாளைய சமுதாயம் நீங்கள் தான்.

தன்னம்பிக்கை

உங்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைய ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கல்லூரி பருவத்தில் தன்னம்பிக்கையை மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். லட்சியத்தோடு செயல்பட வேண்டும்.

கல்லூரி பருவத்திலேயே எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எளிதில் யாரையும் நம்பக்கூடாது. துணிவு, தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனி முத்திரை பெற்றுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் பெண்களுக்கென்று தனி முத்திரை பெற்றுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்கள் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு பெற்றவர்கள். இக்கல்லூரியில் படிக்க கூடிய மாணவிகள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மகளிர் திட்ட இணை இயக்குனர் பழனி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை ஒன்றியக்குழுத்தலைவர் காமாட்சி மூர்த்தி, கல்லூரி முதல்வர் அறவாழி மற்றும் கல்லூரி பேராசியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்