வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பரிதாப சாவு

சேலம் பொன்னம்மாபேட்டையில் வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-10-17 19:23 GMT

சேலம் பொன்னம்மாபேட்டையில் வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமையல் காண்டிராக்டர்

சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். சமையல் காண்டிராக்டர். இவரது வீட்டின் முதல் மாடியில் மாணிக்கம் (வயது 63) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் வழக்கம்போல் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ராஜேஸ்வரி பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததுடன் மேற்கூரையும் சரிந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. வீட்டின் பல இடங்களிலும், அருகில் உள்ள வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது.

அலறி அடித்து ஓட்டம்

இந்த பயங்கர சத்தம் ஏதோ குண்டு வெடிப்பு நடந்தது போன்று அந்த பகுதியே அதிர்ந்தது. அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடி வந்தனர். அப்போதுதான் மாணிக்கத்தின் வீடு உருக்குலைந்து கிடந்தது.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அபய குரல் எழுப்பினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர்.

7 பேர் படுகாயம்

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த மாணிக்கம், அவருடைய மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் பிரியா, பானுமதி மற்றும் அவர்களது குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்து இருந்தது தெரிய வந்தது.

உடனே அனைவரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே வீட்டுக்குள் இருந்த 4 கியாஸ் சிலிண்டர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டன. தீ விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரவு தூங்க சென்றபோது, கியாஸ் சிலிண்டரை சரியாக ஆப் செய்யவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் விடிய, விடிய கியாஸ் கசிந்து வீடு முழுவதும் நிரம்பி இருந்திருக்கலாம். இதன் காரணமாக அதிகாலையில் கியாஸ் அடுப்பை ராஜேஸ்வரி பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கலெக்டர், மேயர் ஆறுதல்

படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து கேட்டறிந்தனர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, தாசில்தார் செம்மலை ஆகியோர் உடனிருந்தனர்.

மாணிக்கத்துக்கு 2 மகள்கள். 2-வது மகள் பானுமதி கணவரை இழந்தவர். தன்னுடைய மகள் தீக்‌ஷிதாவுடன் மாணிக்கம் வீட்டிலேயே வசித்து வருகிறார். மூத்த மகள் பிரியா திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். தற்போது 2-வது பிரசவத்துக்காக பெற்றோர் வீட்டுக்கு வந்து இருந்தார். கடந்த மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 7 வயது மகன் அவிேனசும் தாயுடன் வசித்து வந்தார். இவர்கள் அனைவருமே விபத்தில் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் பலி

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு 8.30 மணி அளவில் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்