அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவி; புதுமைப்பெண் திட்டம் பயன்தருகிறதா?-மாணவிகள் கருத்து
கிருஷ்ணகிரி:
அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா? என்பது பற்றி மாணவிகள், பேராசிரியை தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.
மாதம் ரூ.1,000 உதவித்தொகை
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்க கூடிய திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணம் நிதி உதவி திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது.
அந்த திட்டத்தின்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழில் படிப்புகளில் இடை நிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.
புதுமைப்பெண் திட்டம்
இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2,3,4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.
அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
3-வது தவணையாக...
விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படை தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன்படி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்த இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசின் இந்த புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு சரியாக கிடைக்கிறதா? அந்த தொகை எந்த அளவுக்கு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது? என்பது குறித்து திட்டத்தில் பயன்பெற்ற மாணவிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
பயனாக உள்ளது
ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் கொடமாண்டப்பட்டியை சேர்ந்த மோனிஷா:-
எனது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு அக்காள், அண்ணன் உள்ளனர். எனது தந்தை மறைவிற்கு பிறகு என்னை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள என்னை போன்ற குடும்பத்தினருக்கு தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்துவதால் கல்லூரி படிப்பிற்கு பயனாக உள்ளது.
முதல் வருடம் பணம் கட்டி படிக்க சிரமப்பட்டோம். தற்போது கல்லூரி படிப்பு முடிக்கும் வரையில் தமிழக அரசின் உதவி தொகையால் எனது கல்லூரி படிப்பை எந்த வகையிலும் பாதிப்பு இன்றி தொடரமுடியும்.
கல்வியை தொடர முடிகிறது
கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பி.சுஜிதா பாய்:-
நான் 6-ம் வகுப்பு மதல் 10-ம் வகுப்பு வரை கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். 11, 12-ம் வகுப்புகளை ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தற்போது கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து வருகிறேன்.
நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்களின் உயர் படிப்பை தொடர மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. எனக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. இதன் மூலம் எனது கல்வியை நான் எந்த சிரமமும் இன்றி தொடர முடிகிறது.
அதிகரிக்கலாம்
பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவி தேன்மொழி:-
நான் பர்கூரில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனது தந்தை ஜவுளி கடையில் பணி புரிகிறார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை தேர்வு செய்து தற்போது 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். ஏழமையான குடும்பத்தை சேர்ந்த நான் தற்போது முதல்-அமைச்சரின் புதுமை பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெறுகிறேன். இந்த உதவித்தொகை நான் 3 ஆண்டுகள் கல்லூரி படிப்பை முடிக்க சற்று உதவியாக இருக்கும். ஆனால் இந்த உதவித்தொகை வழங்குவதை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக அதிகரித்து வழங்கலாம். இதன்மூலம் எங்களது குடும்பத்தின் தேவையையும் சற்று சமாளிக்க முடியும்.
ஆர்வத்தை தூண்டுகிறது
சிந்தகம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி லதா கூறியதாவது:-
நான் பர்கூர் தாலுகா சிந்தகம்பள்ளியில் வசித்து வருகிறேன். எனது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். நான் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தேன். தற்போது பர்கூர் பொறியியல் கல்லூரியில் எலக்ரானிக் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். மாதம் எனது செய்முறை பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்கு சிரமப்பட்டு வந்தேன். பெற்றோர்களுக்கு குறைந்த வருமானமே உள்ள நிலையில் உயர் கல்வி படிப்பது சிரமமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது முதல்-அமைச்சரின் புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 மாதம் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தது ஏழை, எளிய மாணவர்களும் பள்ளியோடு கல்வியை நின்று விடாமல் உயர் கல்வியை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளது.
உதவுவாளா புதுமைப்பெண்?
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து, அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000-ம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கல்லூரி மாணவிகள் பலர் பயன்பெற்று வருகின்றனர். வருங்காலத்தில் கல்லூரியில் சேரும் மாணவிகளும் பயன் பெற உள்ளனர். இந்த திட்டத்தின் செயல்பாடு மாணவிகளுக்கு உதவுகிறதாகவே உள்ளது. ஆனால் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டும் உதவும் இந்த புதுமைப்பெண், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த ஏழ்மையில் உள்ள மாணவிகளுக்கும் உதவ வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. உதவுவாளா புதுமைப்பெண்?...