கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் கொன்று புதைப்பு - தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது

கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் கொன்று புதைக்கப்பட்டார். அவரது உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

Update: 2023-04-28 09:22 GMT

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தர்மய்யா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 22). 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு ஒன்றில் தர்மய்யா தனதுகுடும்பத்துடன் தங்கி காவல் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள சொந்த ஊரான புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு தர்மய்யா தனது குழந்தையுடன் சென்று உள்ளார்.

அப்போது மனைவி லட்சுமி குறித்து தர்மய்யாவிடம் அவரது சகோதரி விசாரித்தார். குடிபோதையில் இருந்த தர்மய்யா, இந்த மாதம் 23-ந்தேதி, கோபத்தில் மனைவியை அடித்து கொன்று மாந்தோப்பிலேயே புதைத்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேற்கண்ட தகவலை, கரடிபுத்துாரில் உள்ள மற்றொரு மாதோப்பு காவலாளியான சுதா என்பவரிடம், தர்மய்யாவின் சகோதரி தெரிவித்தார்.

இதனையடுத்து சுதா அளித்த தகவலின் அடிப்படையில் பாதிரிவேடு போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி முன்னிலையில் போலீசார் லட்சுமியின் உடலை மாந்தோப்பில் இருந்து தோண்டி எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தர்மய்யாவை வலை வீசி தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்படும் போதுதான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்