மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
சென்னை பெரம்பூரில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பெரம்பூர் கோபால் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஜமுனா (வயது 33). இந்த தம்பதியருக்கு 2017-ம் ஆண்டு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு மகள், 1 வயதில் மகனும் உள்ளனர். நந்தகுமார் தனியார் நிறுவனத்தில் பொருட்கள் வினியோகிக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஜமுனாவுக்கும் அவரது மாமியார் யசோதாவிற்கும் நேற்று தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த ஜமுனா வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். வெகுநேரமாகியும் அறையில் இருந்து வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஜமுனா தூக்கில் தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.