காலாவதியான காய்ச்சல் மருந்தை குடித்த சிறுமி உயிரிழப்பு

காய்ச்சல் மருந்தை குடித்த சிறுமி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தாள்.

Update: 2024-03-25 19:16 GMT

மதுரை,

மதுரை தத்தனேரி அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 43). இவருடைய மனைவி காவேரி முத்து. இவர்களுடைய மகள் சர்மிதாமணி (வயது 6). இவள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில், சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மருந்தை குடித்த சிறுமி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தாள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவேரிமுத்து உடனடியாக சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் வீட்டில் சிறுமி குடித்த மருந்து காலாவதியானதும், அதனால் அந்த சிறுமி இறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்