சின்னசேலம் அருகே தகராறை விலக்கிவிட்ட பெண் அடித்துக் கொலை மகன் உள்பட 2 பேர் கைது
சின்னசேலம் அருகே தகராறை விலக்கிவிட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சின்னசேலம்,
முன்விரோதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி வேலம்மாள்(வயது 60). இவர்களுக்கு சுரேஷ்குமார் (32), வேல்முருகன் (30) ஆகிய 2 மகன்களும், செல்வி (33) என்ற ஒரு மகளும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் இறந்து விட்டார்.
முருகேசன் குடும்பத்தினருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 80 சென்ட் நிலம் உள்ளது. மேலும் ரூ.16 லட்சம் கடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சுரேஷ்குமார், வேல்முருகன் மற்றும் செல்வி ஆகியோருக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். வேலம்மாள் பாக்கம்பாடியில் சுரேஷ்குமாருடன் வசித்து வந்தார். வேல்முருகன் தனது குடும்பத்துடன் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் வசித்து வருகிறார். குடும்ப கடன் தொகையை அடைப்பது சம்பந்தமாக வேல்முருகன், சுரேஷ்குமார் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
தாக்குதல்
இந்த நிலையில் சம்பவத்தன்று பாக்கம்பாடிக்கு வந்த வேல்முருகனுக்கும் சுரேஷ்குமாருக்கும் இடையே கடனை அடைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி, தாக்கிக் கொண்டனர். இதைபார்த்த வேலம்மாள் மகன்கள் இருவரையும் சமாதானப்படு்த்த முயன்றார். ஆப்போது ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், அவருடைய மனைவி கவுதமி (31), உறவினரான கேரள மாநிலம் வண்டிப்பெரியாரை சேர்ந்த கவுதம் (29) ஆகிய 3 பேரும் சேர்ந்து வேலம்மாளை உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு குழாயால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த வேலம்மாள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேலம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் உள்பட 2 பேர் கைது
இதுகுறித்து அவருடைய மகள் செல்வி கொடுத்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, சுரேஷ்குமார், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கவுதமியை தேடி வருகிறார்கள். தம்பியுடன் தகராறு செய்ததை விலக்கி விட்ட தாயை மனைவி, மைத்துனருடன் சேர்ந்து மூத்த மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.