இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

Update: 2022-06-13 12:04 GMT

திருப்பூர்,

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

முறைகேடு புகார்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். ஊத்துக்குளி தாலுகா குன்னத்தூர் காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் அளித்த மனுவில், கூனம்பட்டி ஊராட்சியில் முறைகேடு புகார் எழுந்ததால் கடந்த 2010-11-ம் ஆண்டு முதல் 2022-23 வரை வரவு-செலவு கணக்கு நகலை தர வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டும் இதுவரை தகவல் தர மறுக்கிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார்.பா.ஜனதா கட்சியின் நெருப்பெரிச்சல் மண்டல நிர்வாகிகள் அளித்த மனுவில், வாவிபாளையத்தில் இருந்து குருவாயூரப்பன் நகர் செல்லும் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறார்கள். இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடம் கட்டி 8 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. கட்டிடம் பழுதடைந்து சமூகவிரோதிகளின் கூடாரமாக உள்ளது. குருவாயூரப்பன் நகர் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா

அவினாசி தெக்கலூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த 2004, 2011-ம் ஆண்டு கலெக்டர் மூலமாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. பட்டா பெற்றவர்கள், அந்த பட்டாவை மற்றவர்களுக்கு விலைக்கு விற்று விட்டார்கள். அவ்வாறு விலைக்கு பட்டா வாங்கி 15 ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். தற்போது வீடு கட்டி குடியிருப்பவர்களின் பெயரில் வீட்டுவரி ரசீது, மின்சார ரசீது, குடிநீர் இணைப்பு எதுவும் பெற முடியாத நிலை உள்ளது. விற்றவர் பெயரில் உள்ள பட்டாவை தற்போது குடியிருப்பவர்களின் பெயரில் மாற்றம் செய்து வழங்கி உதவ வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திருப்பூர் வீரபாண்டி கணபதிபாளையம் மாதேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நாங்கள் 30 வருடமாக இந்த பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலமோ, வீடோ கிடையாது. மாதேஸ்வரன் நகரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் இருப்பதாக தெரிகிறது. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும் என்றுகூறியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்