கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.;

Update:2023-04-09 00:15 IST

சேந்தமங்கலம்

புவிசார் குறியீடு

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.

தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

கொல்லிமலை மிளகு

அந்த வகையில் கொல்லிமலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்டதாகும். எனவே கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது அங்கு வாழும் பழங்குடியின விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இதற்கான நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுவது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை. கடல் மட்டத்தில் இருந்து 4,663 அடி உயரம் கொண்டது. 280 சதுர கி.மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த மலைப்பகுதியில் 14 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் மா, பலா, வாழை, அன்னாசி, மிளகு, நெல், மரவள்ளி, சிறு தானியங்கள் பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இதில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கொல்லிமலை மிளகு. 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பார்கள். அந்த வகையில் கர்நாடகம், கேரளத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் மிளகு உற்பத்தி செய்யப்படுவதை காண முடியும்.

7 ஆயிரம் ஏக்கர்

அத்தகைய மிளகு கொடிகள் கொல்லிமலையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளன. சில்வர்ஒக் மரங்களில் ஊடு பயிராக பரவ விடப்படும் மிளகு கொடிகள் வளர்ந்து பருவநிலையை எட்ட 4 ஆண்டுகள் வரை ஆகும். அறுவடைக்கு ஏற்றவாறு மிளகு கொடி படர்ந்து விட்டால், குறைந்தபட்சம் 15 முதல் 18 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மிளகு வகைகளில் பன்னியூர்–1, கரிமுண்டா, பன்னியூர்–5 ஆகியவை இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. சேலம் ஜவ்வரிசி உள்பட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்து இருப்பதை தொடர்ந்து, கொல்லிமலை மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வாடல் நோய்

இது குறித்து கொல்லிமலை விவசாயி பொன்னுசாமி கூறியதாவது:-

மலைப்பகுதியில் உள்ள வாழவந்தி நாடு, திண்ணனூர் நாடு, சேலூர் நாடு ஆகிய பகுதிகளில் மிளகு விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. மிளகு வளர்ப்பிற்கான சீதோஷண நிலை இப்பகுதியில் நன்றாக உள்ளது. இங்கு பன்னீர் மற்றும் கரிமுண்டா ரக மிளகுகள் விளைந்து வருகிறது. இருந்தபோதிலும் பன்னீர் ரகமே அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு முன்பாக மிளகு செடிகளில் வாடல் நோய் தாக்கி சில பகுதிகளில் அந்த விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான மருந்துகளை அடிப்பதற்கு சிபாரிசு செய்கின்றனர். அந்த மருந்துகளை அடித்தாலும், வாடல் நோய் பாதிப்பில் இருந்து மீளாத சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே மிளகு செடிகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.

குளிர்பதன கிடங்கு

சமூக ஆர்வலர் பிரகாஷ்:-

கொல்லிமலையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தற்போது மிளகு விவசாயம் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மலைவாழ் மக்களின் வருமானத்தை நிலை நிறுத்தும் விதமாக 14 நாடு பகுதிகளை இரண்டாக பிரித்து செம்மேடு மற்றும் பவர்காடு பகுதியில் தலா ஒரு மிளகு சேமிக்கும் குளிர் பதன கிடங்கை அமைத்து கொடுக்க வேண்டும்.

கொல்லிமலையில் மிதமான தட்பவெப்ப நிலை, ஈரப்பதம் அதிகம் உள்ளதால் மிளகு வளர்ச்சிக்கு உதவியாக அமைகிறது. மேலும் இயற்கை விவசாய முறையில் மிளகு விளைவிக்கப்படுகிறது. இங்குள்ள மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைத்தால், சீரான விலை கிடைக்கவும், ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தரமிக்க கொல்லிமலை மிளகை அனைவரும் விரும்பி வாங்கும் வகையில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி கவுரவிக்க வேண்டும் என்பதே இங்குள்ள விவசாயிகள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்