குமரி மாவட்டத்திற்கு கிடைத்தது இரட்டை மகுடம்: மார்த்தாண்டம் தேன், மயிலாடி கல் சிற்பத்துக்கு புவிசார் குறியீடு

குமரி மாவட்டத்தில் உள்ள தனித்தன்மை வாய்ந்த மார்த்தாண்டம் தேன், மயிலாடி கல் சிற்பத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

Update: 2023-03-31 18:52 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் உள்ள தனித்தன்மை வாய்ந்த மார்த்தாண்டம் தேன், மயிலாடி கல் சிற்பத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு சட்டம் கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை இந்தியாவில் 435 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தநிலையில் நேற்று தமிழகத்திற்கு மட்டும் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இதில் மார்த்தாண்டம் தேன் மற்றும் மயிலாடி கல்சிற்பத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதாவது குமரி மாவட்டத்திற்கு இரட்ைட மகுடம் கிடைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

மார்த்தாண்டத்தை மையமாக கொண்டு அருமனை, திற்பரப்பு, மஞ்சாலுமூடு, களியல், குலசேகரம், திருவட்டார், சேக்கல், பிணந்தோடு, கொட்டூர், மலவிளை, அருவிக்கரை, ஆற்றூர் உள்ளிட்ட பகுதிகளில் தேனீ வளர்ப்போர் பெருமளவில் உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன் மார்த்தாண்டம் தேன் என அழைக்கப்படுகிறது.

தரம், மருத்துவகுணம் வாய்ந்தது

இங்கு தேன் உற்பத்திக்கு அச்சாரமிட்டது 1920-ம் ஆண்டு ஆகும். மார்த்தாண்டத்தில் ஒய்.எம்.சி.ஏ. மூலம் கிறிஸ்தவ மிஷனரியினர் ரப்பர் மரத்தில் கூடுகளை பயன்படுத்தி தேன் சேகரிக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். அன்று முதல் முழுநேர, பகுதி நேர தொழிலாக பலர் இந்த தேன் உற்பத்தியை நடத்தி வருகிறார்கள். இங்கு ரப்பர் சார்ந்த தொழிலாக தேனீ உற்பத்தி செய்யப்படுவது தனித்தன்மை வாய்ந்தது.

மற்ற இடங்களில் உற்பத்தி செய்யும் ேதனை விட மார்த்தாண்டம் தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. இங்கு தேன் சுகாதாரத்தோடு சேகரிக்கப்படுவதால் தரமானதாகவும் இருக்கிறது. எனவே இதனை அனைவரும் விரும்பி வாங்குகிறார்கள்.

இது தவிர மார்த்தாண்டம் தேனில் குளுக்கோஸ் அதிகம் இருப்பதாக தேன் உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக மார்த்தாண்டத்தை தமிழகத்தின் தேன் கிண்ணம் என்று சொன்னால் மிகையில்லை. இதுபோன்ற சிறப்புகளால் தான் மார்த்தாண்டம் தேனுக்கு ஒரு மகுடமாக தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தேனீ வளர்ப்போரை ஊக்கப்படுத்தும்

இதுகுறித்து மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர் டோரா கிறிஸ்டி கூறுகையில், "தேனீ வளர்ப்போர்களின் வசதிக்காக மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் எனது தலைமையில் தற்போது இயங்கி வருகிறது. மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இதனால் சர்வதேச அளவில் மார்த்தாண்டம் தேனுக்கு மதிப்பு கிடைக்கும். மேலும், தேனீ வளர்ப்போர் மற்றும் தொழிலாளர்களை இது ஊக்கப்படுத்தும். 1937-ம் ஆண்டு முதல் தேனீ வளர்ப்போர் சங்கம் செயல்பட்டு வருகிறது" என்றார்.

மயிலாடி கல்சிற்பம்

கற்சிலைகளுக்கு பெயர் பெற்ற கிராமம் மயிலாடி. இங்கு இரவு, பகலாக சிற்ப பணி நடந்து வருகிறது. திரும்பிய திசையெங்கும் கற்கள் குவிந்து கிடக்கும்.

இரும்பு பட்டறையில் இரும்பை உருக்கி அடித்து உருவாக்குவது போல் இடை இடையே பெருமாள், நடராஜர், அய்யப்பன், காமாட்சி, மீனாட்சி, துர்க்கை, சுடலைமாடன், புத்தர், அகத்தியர், முத்தாரம்மன், சரஸ்வதி என சாமி சிலைகள் செதுக்கியும், செதுக்காமலும் சிலைகள் தொழிற்கூடங்களில் நிற்கும். சிலைகளை வடிப்பதற்காக பாறாங்கற்கள் மயிலாடியிலேயே கிடைத்து விடுவது இதன் சிறப்பம்சமாகும். இந்த இடங்களில் கிடைக்கும் கருப்புக்கல்லில் தான் தெய்வங்களின் சிலைகளையே வடிக்க முடியுமாம். மயிலாடியில் இருந்து தமிழகத்தை விட கேரளா கர்நாடகாவுக்கு தான் அதிக சிலைகள் செல்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

கைவண்ணத்தின் சிறப்பு

லண்டன் தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை, அமெரிக்காவில் உள்ள நடராஜர் சிலை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை, கயத்தாறில் உள்ள கட்டபொம்மன் சிலை ஆகியவை மயிலாடி மண்ணில் இருந்து சென்றவை. அம்மி, உரல், எல்லைக்கற்கள் உள்ளிட்டவைகளும் இங்கு தான் தயார் செய்யப்படுகின்றன. சிலைகள் செய்வதற்காக 100-க்கும் மேற்பட்ட சிறு பட்டறைகளும், 15-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களும் மயிலாடி சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ளன.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் கட்டுமான பணிக்காக திருவிதாங்கூர் மன்னர்களால் நாடு முழுவதும் இருந்து சிற்பக்கலைஞர்கள் சுசீந்திரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். இந்த பணிகள் முடிவடைய பல ஆண்டுகள் ஆனதால் தொழிலாளர்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டதாக கூறப்படுகிறது. அன்று தொடங்கி இன்று வரை இவர்களின் கைவண்ணம் உலகமெங்கும் தொடர்கிறது.

உலகம் முழுவதும் கால் பதித்துள்ளது

இங்கு தொன்மை வாய்ந்த சிற்பங்கள் மட்டுமின்றி கோவிலுக்கான தூண்கள், காமராஜர், நேரு, முத்துராமலிங்க தேவர், சிவாஜி போன்ற தலைவர்களின் சிலைகளும் செய்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இசை தூண்கள் மயிலாடி சிற்பிகளின் கலைத்திறன்கள் ஆகும். கேரளாவின் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் கருவறை சிற்பமும் இங்கு உருவானதுதான். இப்படி தமிழக கைத்திறனுக்கு சாட்சி சொல்ல உலகம் முழுவதும் இருக்கின்றன மயிலாடி சிற்பங்கள்.

இத்தகைய மயிலாடி கற்சிற்பங்களுக்கு தான் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது இங்குள்ள சிற்ப கலைஞர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது. ஒரே சமயத்தில் குமரி மாவட்டத்தில் 2 பொருட்களுக்கு தனித்தன்மை வாய்ந்த புவிசார் குறியீடு கிடைத்திருப்பது குமரிக்கும் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்