தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

Update: 2023-03-31 19:57 GMT

மணப்பாறை முறுக்கு, தைக்கால் பிரம்பு உள்பட தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவர் சஞ்சய் காந்தி கூறினார்.

இது தொடர்பாக அவர் தஞ்சையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு சட்டம் கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை இந்தியாவில் 435 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் 10 பொருட்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவையாகும்.

மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மயிலாடுதுறையை அடுத்த தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள், மார்த்தாண்டம் தேன், மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வரிக்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டன. இவற்றில் ஊட்டி வரிக்கி தவிர மற்ற 10 பொருட்களும் எனது மூலமாக விண்ணப்பம் செய்யப்பட்டது.

4 மாத கால அவகாசம் நிறைவு

இந்த 11 பொருட்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசிதழில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி வெளியிடப்பட்டது. புவிசார் குறியீடுக்காக அரசிதழில் வெளியிடப்பட்ட 4 மாதங்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாவிட்டால், அந்த பொருட்கள் புவிசார் குறியீடு பதிவு பெறுவதற்கு உறுதி செய்யப்படும்.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிக்கப்பட்ட 11 பொருட்கள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டதில் இருந்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கான 4 மாத கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. எனவே 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 56 ஆக உயரும். புவிசார் குறியீடு பட்டியலில் தமிழகம் முதலிடம் பெறக்கூடிய நிலை ஏற்படும்.

தைக்கால்புரம் பிரம்பு வேலைபாடுகள்

இவற்றில் மணப்பாறை முறுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆத்தூர் வெற்றிலை குறித்து கி.பி. 1295-ம் ஆண்டு மார்கோபோலோ எழுதிய பயணக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது. கம்பம் பன்னீர் திராட்சை 19-ம் நூற்றாண்டில் இருந்து தேனி மாவட்டம் கம்பம், போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம் வட்டங்களில் விளைவிக்கப்படுகிறது. நகமம் காட்டன் சேலை 1871-ம் ஆண்டில் இருந்து பொள்ளாச்சி, சாலூர், கிணத்துக்கடவு, ஆணைமலை, உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களில் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மயிலாடி கற்சிற்பம் 100 ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் 20-ம் நூற்றாண்டில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மார்த்தாண்டம் தேன் 1924-ம் ஆண்டுக்கு முன்பாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கிடைக்கும் கரிசல் மண், செம்மண்ணில் தயாரிக்கப்படும் மானாமதுரை மண்பாண்டம் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கக்கூடியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்