சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது
சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று திருப்பூரில் நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார்.;
சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று திருப்பூரில் நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார்.
தோற்கடிப்போம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுக்கூட்டம் நேற்று இரவு ஆலங்காட்டில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை, மது விற்பனை அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது. போதைப்பொருட்களை ஒழிக்க அக்கறை காட்டாமல் சனாதன தர்மம் ஒழிப்பு என்று பேசி வருகிறார்கள். இந்தியாவின் மிகப்பலம்பொருத்திய பிரதமராக மோடி விளங்கி வருகிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிக்கொடுத்துள்ளார். இந்து விரோத கட்சிகளை தோற்கடிப்பதே இந்து முன்னணியின் வேலை.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் பேசியதாவது:-
சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது. இந்து மத உணர்வை துன்புறுத்தினால் இந்துக்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்து முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணியில் தீண்டாமை இல்லை. சாதி, மதத்தை கடந்து இந்து மதத்தால் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
சனாதனத்தில் கையை வைத்தவர்கள் மின்சாரத்தில் கையை வைத்தவர்கள் ஆவார்கள். அது அவர்களை விடாது. இந்து மத உணர்வுகளை தொடர்ந்து தி.மு.க. புண்படுத்தி வருகிறது. இந்த ஒருமுறையாவது இந்துவாக இருந்து நீங்கள் வாக்களித்தால் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அருளாசி
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆசியுரை வழங்கினார். பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர்கள் தாமு.வெங்கடேஸ்வரன், செந்தில்குமார், சேவுகன், சண்முகம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், கோட்ட செயலாளர் மோகனசுந்தரம், செந்தில்குமார், ஆர்.எஸ்.எஸ்.கோட்ட தலைவர் பழனிசாமி, சேவாபாரதி அமைப்பாளர் ராமசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டம் நிறைவடைந்ததும் விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.