ரெயில் நிலையங்களில் பொதுமேலாளர் திடீர் ஆய்வு

நாகர்கோவில்-குழித்துறை ரெயில் நிலையங்களில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-07-28 18:45 GMT

நாகர்காேவில்:

நாகர்கோவில்-குழித்துறை ரெயில் நிலையங்களில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திடீர் ஆய்வு

தெற்கு ெரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று காலை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தார். அதன் பிறகு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரூ.11 கோடியில் அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின்கீழ் நடைபெற உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் இந்த திட்டத்தில் பழைய பாரம்பரியத்தை மாற்றாமல் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய நடைமேடைகளில் நடைபெற உள்ள பணிகள், ரெயில் நிலையத்தின் முன்புறம் நடைபெற உள்ள அலங்கார பணிகள், புல்தரையுடன் கூடிய ரவுண்டானா அமைய உள்ள இடம், பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட உள்ள பாதைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

குழித்துறை ரெயில் நிலையம்

மேலும், கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நடைபெற்று வரும் இரட்டை ரெயில் பாதை பணி குறித்தும், ஊட்டுவாழ்மடம் பகுதியில் நடைபெறும் சுரங்கப்பாதை பணி குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார். மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டதோடு டிக்கெட் கவுண்ட்டரையும் பார்வையிட்டார். அங்கு பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ரெயில்களின் வருகை, புறப்பாடு குறித்த டிஜிட்டல் ஸ்கிரீன் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.சுமார் ¾ மணி நேரம் ஆய்வு நடத்திய பிறகு பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நாகர்கோவிலில் இருந்து தனி ரெயில் மூலம் குழித்துறைக்கு புறப்பட்டு சென்றார். அங்கும் அவர் அம்ரித் பாரத் ரெயில்நிலைய திட்டப்பணிகள் குறித்து ரெயில் நிலையத்துக்குள்ளும், ரெயில் நிலையத்தின் முன்புற பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து திருவனந்தபுரத்துக்கு தனி ரெயிலில் புறப்பட்டுச் சென்றார். இந்த ஆய்வின்போது திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் சர்மா, முதுநிலை வணிக அதிகாரி ஜெரின் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்